வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நாளை (25 ந் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதனால் தொடர்ந்து மூன்று நாள் வங்கிப் பணிகள் பாதிக்கப்படும்.
மத்திய அரசு, இந்திய வங்கிகள் சங்கம், ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவைகளுக்கு இடையே நேற்று வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் கோரிக்கைகள் குறித்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தை தலைமை தொழிலாளர் நல அதிகாரி எஸ்.கே. முகப்பதியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத காரணத்தினால் ஏற்கனவே அறிவித்தபடி 25 ந் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்தன.
வங்கி ஊழியர்கள் ஓய்வு கால பணத்திற்கு பதிலாக (பென்ஷன்) பிராவிடண்ட் பணட் பணம் வழங்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை வங்கிகள் சார்பில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட இந்திய வங்கிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.
பாரத் ஸ்டேட் வங்கியுடன், அதன் மற்ற துணை வங்கிகளை இணைக்க கூடாது என வங்கி ஊழியர்கள் கூறிவருகின்றனர். இந்த பிரச்சனையில் அரசு தரப்பிலும், இந்திய வங்கிகள் சங்கத்தின் சார்பிலும் எவ்வித கருத்தும் தெரிவிக்க இயலாது என பேச்சு வார்த்தையின் போது ஊழியர் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
தங்களுடைய கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பதால் 25 ந் தேதி ( வெள்ளிக் கிழமை) வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஊழியர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
எனவே 25 ந் தேதி வேலை நிறுத்தம், 26 ந் தேதி குடியரசு தின விடுமுறை, 27 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை. ஆகவே வங்கி பணிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.