பெண் நக்சலைட் தளபதி கைது: ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்!
செவ்வாய், 22 ஜனவரி 2008 (16:32 IST)
சட்டீஸ்கரில், மாலதி என்ற பெண் நக்சலைட் தளபதி அவரின் கூட்டாளிகள் இருவருடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உருக்கு ஆலைகள் நிறைந்த பிலாய் நகரத்தில் மாலதி பதுங்கி இருந்ததாகவும், இவர் மற்றொரு நக்சலைட் தளபதியான குத்சா உசெண்டியின் மனைவி என்றும் ராய்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் லால் உமேத் சிங் தெரிவித்தார்.
மாலதி பதுங்கியிருந்த ஃபரீத் நகர் வீட்டில் இருந்து 9 துப்பாக்கிகள், 5 நாட்டு வெடிகுண்டுகள், ரூ.6 லட்சம் பணம், 11 செல்பேசிகள், வயர்லெஸ் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னதாக, நேற்றிரவு அதே இடத்தில் இருந்து 81 நாட்டு வெடிகுண்டுகள், 22 அயல்நாட்டு வயர்லெஸ் கருவிகள் ஆகியவற்றைக் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அங்கேயே மறைந்திருந்த காவலர்கள் இன்று மாலதியைக் கைது செய்துள்ளனர்.