அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட்டுவிட்டால் உலக அரங்கில் இந்தியாவின் புகழும் மதிப்பும் உயரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலர் டி. ராஜா கூறினார்.
மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என்று இடதுசாரி கட்சிகள் முடிவு எடுத்தால் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு தொடராது. அதேநேரத்தில் ஒப்பந்தத்தைக் கைவிட்டால் உலக அரங்கில் இந்தியா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய கம்யூனிட்ஸ் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜாவிடம் கேட்டபோது, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிட்டால் உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கும் மதிப்பும் உயரும் என்றார்.
பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை அரசு மதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நடந்த விவாதமும் பெரும்பாலானோர் இந்த ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்றார் ராஜா.