துறைமுக உள்கட்டமைப்பு திட்ட செயலாக்கம் புதிய மாதிரி சலுகை ஒப்பந்தம்: அமைச்சரவை ஒப்புதல்!
சனி, 5 ஜனவரி 2008 (10:47 IST)
பெரிய துறைமுகங்களுக்கான திட்டங்களை பொதுத் துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுத்துவதற்கு உதவும் புதிய மாதிரி சலுகை ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியதாவது:
தேசிய கடல்சார் துறைகள் மேம்பாட்டு திட்டம் 2005-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செயல்பாட்டுக்கு வந்தது. துறைமுகப் பிரிவில் ரூ.55,000 கோடி மதிப்பீட்டில் 276 திட்டங்களையும் கப்பல் போக்குவரத்து பிரிவில் ரூ.45,000 கோடி மதிப்பீட்டில் 111 திட்டங்களையும் உள்ளடக்கியது இந்த மேம்பாட்டுத் திட்டம்.
இதில், துறைமுகப் பிரிவு திட்டங்கள் 2012-2013 ஆம் ஆண்டிலும், கப்பல் போக்குவரத்துப் பிரிவுலுள்ள திட்டங்கள் 2024-2025 ஆம் ஆண்டிலும் முடிக்கப்பட உள்ளன.
துறைமுகப் பிரிவு திட்டங்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களாகும். எனவே இந்த பிரிவிலுள்ள திட்டங்களை பொதுத்துறையும் தனியார் துறையும் இணைந்து செயல்படுத்துவதென்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்தது. இதன்படி பெரிய துறைமுகங்களை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் அவற்றின் சரக்கு கையாளும் திறனை உயர்த்தவும் விரிவான மேம்பாட்டு திட்டம் ஒன்று எனது முயற்சியால் முதன்முறையாக தயாரிக்கப்பட்டது.
துறைமுக கப்பல் நிறுத்தும் இடங்களை மேம்படுத்தும் திட்டங்களில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக புதிய விரிவான மாதிரி சலுகை ஒப்பந்தத்தின் தேவை ஏற்பட்டது. எனவே புதிய மாதிரி சலுகை ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இது, 2000-ஆம் ஆண்டில் துறைமுகத்துறை தயாரித்த முந்தய மாதிரி உரிம ஒப்பந்தத்திற்கு பதிலாக அமையும்.
துறைமுகத் திட்டங்களுக்கு தனியார் முதலீடுகள் வேகமாக கிடைக்கும் வகையில் புதிய மாதிரி சலுகை ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களை மேலும் கவரும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது. இதில், சலுகை வழங்கும் அதிகார அமைப்பிற்கும் சலுகை பெறுபவர்களுக்கும் ஏற்படக்கூடிய இழப்பை சமமாக பகிர்ந்துகொள்வதற்கு வகைசெய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இதில் வகைசெய்யப்பட்டுள்ளது.
துறைமுகங்களை பயன்படுத்துவோரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு முறைகளை சலுகை பெறுவோர் கடைபிடிப்பதற்கும் இந்த ஒப்பந்தத்தில் தேவையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முறை ஒன்றும் புதிய மாதிரி சலுகை ஒப்பந்தத்தில் உள்ளது.
தனியார் முதலீட்டாளர்கள் துறைமுக வசதிகளை மேம்படுத்தி அவற்றை செயல்முறைப் படுத்துவதற்கு தேவையான ஒளிவுமறைவற்ற சூழலை மேம்படுத்துவதற்கு புதிய மாதிரி சலுகை ஒப்பந்தம் வழிவகுக்கும். மேலும் துறைமுக வசதிகளை பயன்படுத்துவோரின் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் இந்த திட்டம் உறுதி செய்யும்.