பெட்ரோல் விலையை உயர்த்தக் கூடாது: மார்க்சிஸ்ட் எச்சரிக்கை!
வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:42 IST)
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய எரிபொருட்களின் விலைகளை உயர்த்தும் முடிவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கைவிடவேண்டும் என்றும், அவ்வாறு உயர்த்தினால் போராட்டம் நடத்தும் முடிவுக்கு தாங்கள் தள்ளப்படுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக புவனேஸ்வரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, "பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மற்றொருமுறை உயர்த்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்றார்.
பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை முறைப்படுத்தாமல், அவற்றின் விலைகளை உயர்த்துவதில் நியாயமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
"பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் சாதாரண மக்களுக்கு நெருக்கடியைத் தரக் கூடாது என்று மத்திய அரசிடம் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். சாதாரண மக்களின் மீது சுமைகளை ஏற்றாமல், பெட்ரோலியப் பொருட்களில் இருந்து வருவாயைப் பெருக்கும் வழிகளை மத்திய அரசு தேட வேண்டும்.
அடுத்த நிதிநிலை அறிக்கையை உருவாக்கும் வேலையில் நிதியமைச்சர் இறங்கியுள்ள இந்த நேரத்தில், பெட்ரோலியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை முறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது" என்றார் யெச்சூரி.