மத்தியப் பிரதேசத்தில் பள்ளி வளாகத்தில் 8 ஆம் வகுப்பு மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள சோர்பானி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு தர்மு கவுல் என்ற மாணவன் 8 ஆம் வகுப்பிலும், ராகுல் சிங் என்ற மாணவன் 10 ஆம் வகுப்பிலும் படித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை பள்ளி வளாகத்தில் தர்மு கவுலுக்கும், ராகுல் சிங்குக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ராகுல் சிங் திடீரெனத் தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து தர்மு கவுலை நோக்கி சுட்டான்.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் ஓடி வந்து பார்த்த போது, தர்மு கவுல் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உடனடியாக தர்மு கவுலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவன் இறந்து விட்டான்.
இதுபற்றித் தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவன் ராகுல் சிங்கை கைது செய்தனர். அவனிடம் இருந்த நாட்டுப் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டாவது சம்பவம்
இந்தியாவில் பள்ளி வளாகத்தில் மாணவன் சுட்டுக் கொல்லப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த மாதம் 11 ஆம் தேதி அன்று குர்கானில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவனை, சக மாணவர்கள் 2 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.