டெல்லியில் 4 தீவிரவாதிகள் கைது!
வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:50 IST)
தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்தன்று சதிச்செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டுப் பதுங்கியிருந்த, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாபர் கல்சா இயக்கத் தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டெல்லி காவல் துறை சிறப்புப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கைதாகியுள்ள தீவிரவாதிகள் குடியரசு தினத்தன்று சதிச் செயல்களுக்குத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது என்றார்.
மொகாலியைச் சேர்ந்த பல்ஜித் சிங், சங்ரூரைச் சேர்ந்த பீக்கர் சிங், லூதியானாவைச் சேர்ந்த குல்வீந்தர்ஜீத் சிங், பன்ச்குலாவைச் சேர்ந்த தர்லோச்சன் சிங் என்றும் அவர் கூறினார்.
இவர்களிடம் இருந்து 4 பிஸ்டல்களும், 124 சுற்றுகள் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்த காவல்துறையினர், தீவிரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தனர் என்ற விவரத்தை வெளியிடவில்லை.