அணுசக்தி ஒப்பந்தம் இறுதி நிலையில் உள்ளது: அனில் ககோட்கர்!
Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (17:46 IST)
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடந்த பேச்சுக்கள் அனைத்தும் முடிந்து விட்டதாகவும், தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தின் வரைவானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தேசிய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்துள்ளார்.
ரவபாட்டாவில் உள்ள ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனில் ககோட்கர், அணுசக்தி ஒப்பந்தம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்த வேண்டிய பேச்சுகள் அனைத்தும் முடிந்து விட்டதால், மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு ஒப்பந்தத்தின் வரைவு அனுப்பப்படும்" என்றார்.
அணுசக்தி ஒப்பந்தமானது நமது நாட்டின் எரிசக்தித் தேவையை நிறைவு செய்யுமே தவிர, அணு ஆயுதச் சோதனையையோ இறையாண்மையையோ நிச்சயமாக பாதிக்காது என்றும் ககோட்கர் கூறினார்.
அணுமின் உற்பத்தி நிலையங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதை உறுதி செய்வது, அணுமின் உற்பத்தி நிலையங்களில் அணுசக்தி தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பது ஆகிய பணிகள் மட்டுமே சர்வதேச அணுசக்தி முகமையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "தாராபூர் அணுமின் நிலையத்தில் உள்ள முதல் இரண்டு உலைகள் போன்ற அயல்நாட்டு ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை சர்வதேச அணுசக்தி முகமை கண்காணிக்கும்" என்றார்.
மேலும், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தாலும், நமது தன்னிச்சையான அணுசக்தித் திட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் ககோட்கர் தெளிவுபடுத்தினார்