இமாச்சல் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!
சனி, 29 டிசம்பர் 2007 (13:16 IST)
இமாச்சலப் பிரதேச சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கூடி சட்டமன்றக் கட்சித் தலைவராக பிரேம் குமார் துமாலை முறைப்படித் தேர்வு செய்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மாநில ஆளுநர் வி.எஸ்.கோக்ஜியை சந்தித்து அரசு அமைக்க உரிமை கோருவார்.
நாளை அம்மாநில முதல்வராக துமால் இரண்டாவது தடவையாக பொறுப்பேற்கவுள்ளார். ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பாம்சன் தொகுதியில் தமக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கர்னல் பி.சி.லேக்வாலை 26,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து துமால் வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றிய பா.ஜ.க. இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு நடைப்பெற்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் 41 இடங்களை வென்று அருதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. காங்கிரசிடமிருந்து மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்த மாநிலத்தில் தான் பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலை விட 12 விழுக்காடு வாக்குகள் கூடுதலாக இந்த தேர்தலில் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 23 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தையும்,3 இடங்களை சுயேட்சைகளும் பெற்றுள்ளனர். இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறையப்போவதை எடுத்துக் காட்டுவதாக பா.ஜ.க. தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி இதனை மறுத்துள்ளதோடு, மாநில அரசு மீதான அதிருப்தி தான் இந்த வெற்றி என்று தெரிவித்துள்ளது.
பதவி விலகும் முதல்வர் வீரபத்ர சிங், சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோகுரூ தொகுதியிலிருந்து 14,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய சட்டமன்றத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.