நிதி அமைச்சரின் ஆலோசகர் ராஜினமா!

வெள்ளி, 28 டிசம்பர் 2007 (19:42 IST)
அடுத்த ஆண்டு நிதி நிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரிக்கும் பணி தொடங்க உள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஆலோசகர் பார்த்தசாரதி சோமி ஆலோசகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இவரையும் சேர்த்து கடந்த சில மாதங்களில் மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து உயர் பதவியில் இருந்த நான்கு பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இவர் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மூன்று வருட பணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி அமைச்சரின் ஆலோசகராக பொறுப்பேற்றார். இவரின் ஒப்பந்த பணிக்காலம் சமீபத்தில் 2009 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு இவரின் பணி ஒப்பந்த காலத்தை வரும் ஜனவரி 11 ந் தேதியுடன் முடித்துக் கொண்டு விட்டது. இந்த பதவியில் இருந்து வருகின்ற 11 ந் தேதி அவர் விடுவிக்கப்படுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர் என்ன காரணத்திற்காக ராஜினாமா செய்தார் என்று அறிவிக்கப்படவில்லை. இவர் கடந்த காலங்களில் மதிப்பு கூட்டு வரி, ஃப்ரின்ஞ் பெனிஃபிட் டாக்ஸ் எனப்படும் சலுகைகள் மீதான வரி, வங்கி பண மாற்றுக்கான வரி ஆகிய புதிய வரிகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்துவதற்காக மாநில நிதி அமைச்சர்களை கொண்ட உயர்மட்ட குழுவில், மத்திய நிதி அமைச்சகத்தின் பிரதிநிதியாக செயல்பட்டார். இவர் பிரேசிலில் மதிப்பு கூட்டு வரியை அறிமுகப்படுத்திய போது கிடைத்த அனுபவத்தை, இந்தியாவிலும் பயன்படுத்தினார். இந்த உயர்மட்ட குழுவில் இவரின் பங்கு சிறப்பாக இருந்தது.

இவர் முன்பு சர்வதேச நிதியத்தின் சார்பில் 30க்கும் அதிகமான லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பணியாற்றி உள்ளார்.

இவர் பிரேசில் அரசின் மிக உயரிய விருதான கமான்டர் ஆப் தி ஆர்டர் ஆஃப் சதர்ன் கிராஸ் என்ற விருதைப் பெற்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்