காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட குழு மோதலும், அரசின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியும்தான் தோல்விக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பா.ஜ.க.வின் வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "குஜராத், இமாசல பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றி இத்துடன் முடிந்துவிடாது. எங்கள் வெற்றிப் பயணம் தொடர்வதற்கான ஒரு அடையாளம் இது.
நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும் என்பதையும், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதையும் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
கடந்த 3 ஆண்டு கால காங்கிரஸ் கூட்டணி அரசில் சாதாரண மக்கள் ஏராளமான பிரச்சனைகளை அனுபவித்து விட்டார்கள். இப்போது காங்கிரசை மக்கள் பழி தீர்த்து விட்டார்கள்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல்களிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்" என்றார்.
காங்கிரஸ் முதல்வர் வெற்றி!
காங்கிரஸ் ஆட்சியை இழந்தாலும் முதல்வர் வீரபத்திர சிங் வெற்றி பெற்றுள்ளார். ரோக்கு தொகுதியில் போட்டியிட்ட இவர், தன்னை எதிர்த்து நின்ற பா.ஜ.க. வேட்பாளர் குசிராமை விட 14,137 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமால் பாங்சன் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லாக் பாலை விட 26,007 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மொத்தம் உள்ள 166 தொகுதிகளில் போட்டியிட்டு பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பாலும் காங்கிரஸ் வாக்கையே பிரித்ததால் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்தது. இதே நிலைதான் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.
சரிந்துவரும் காங்கிரசின் செல்வாக்கு!
குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்து விட்டது. இதன் மூலம் காங்கிரஸ் அரசுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
பா. ஜ.க., 1. மத்திய பிரதேசம், 2. ராஜஸ்தான், 3. இமாச்சல பிரதேசம், 4. குஜராத், 5. உத்தரண்ட், 6. சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது.
மற்ற கட்சிகள் வரிசையில், தமிழ்நாடு- தி.மு.க., பீகார்- ஐக்கிய ஜனதா தளம், ஒரிசா- பிஜூ ஜனதா தளம், ஜார்க்கண்ட்- முக்திமோர்ச்சா, மேற்கு வங்காளம்- மா.கம்யூனிஸ்டு, கேரளா- மா.கம்யூனிஸ்டு, திரிபுரா-மா.கம்யூனிஸ்டு, பஞ்சாப்- அகாலி தளம், உத்தரபிரதேசம்- பகுஜன் சமாஜ் கட்சி, மிசோரம்- மாநில கட்சி, நாகலாந்து- மாநில கட்சி, சிக்கிம்- மாநில கட்சி என்றவாறு உள்ளன.