ஒரிஸ்ஸாவில் 2-வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!
புதன், 26 டிசம்பர் 2007 (18:41 IST)
கிறிஸ்மஸ் தினத்தன்று ஒரிஸ்ஸாவில் கிறிஸ்துவர்களுடன் இந்து மத அமைப்பினர்கள் மோதியதைத் தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இரண்டாவது நாளாக நீடிக்கிறது.
ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று கூறி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கிறிஸ்மஸ் தினமான நேற்று கந்தமால் மாவட்டத்தில் பாலிகுடா, பூல்பானி, டாரினிஜிபாடி, பிரமேனிகான் ஆகிய இடங்களில் வி.எச்.பி.-யினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 தேவாலயங்களை வி.எச்.பி.-யினர் அடித்து சேதப்படித்தினர்.
இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வி.எச்.பி.யினர், பஜ்ரங்தள் அமைப்பினர் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்தை தடை செய்ததுடன், கடைகளை அடைக்கச் சொல்லியும் வற்புறுத்தியுள்ளனர். மதமாற்றத்தை கடுமையாக எதிர்ப்பவரும், மாநில வி.எச்.பி. தலைவர்களில் ஒருவருமான லக்ஸ்மானநந்தா தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரிஸ்ஸாவில் 36 மணி நேர கடையடைப்புக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
வி.எச்.பி. தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிராக்மணி கிராமத்தில் அலங்கரிக்கப்பட்ட வளைவை சேதப்படுத்தியது தொடர்பாக 7 பேர் மீதும், கந்தமால் மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவங்களில் 8 பேலர் படுகாயமடைந்துள்ளனர்.
கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் இன்றும் புதிதாக வன்முறைசம்பவங்கள் நடைப்பெற்றுள்ளது. பாராஹம்மா, ஜலேஷ்பேட்டா பகுதிகளிலும் புதிதாக வன்முறை நடைப்பெற்றுள்ளது. ஜலேஷ்பேட்டாவில் நான்கு வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஆபிரகாம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒரிஸ்ஸாவில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்தும மிகப் பெரிய அளவில் தேவாலயங்கள், வீடுகள், சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் செவ்வாய்கிழமை குறிவைத்து தாக்கப்பட்டன. இதனையடுத்து துணை இராணுவப் படை, மத்திய ஆயுத காவல் படையினர், அதிரடிப்படையினர் என்று மாநிலத்தில் வன்முறை நடைப்பெற்ற பகுதிகளில் கூடுதலாக பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிரினிகியா, டக்கா பாலி, உதயகிரி, ரேய்க்கா ஆகிய இடங்களில் அமல் படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில உயர் காவர் துறை அதிகாரி கூறியுள்ளார்.
மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறியுள்ளன. குஜராத்தைப் போன்று ஒரிஸ்ஸாவிலும் சிறுபான்மையினரைத் தாக்கினால் பெரும்பான்மை சமுதாயத்தின் ஆதரவைப் பெற முடியும் என இந்து அமைப்புகள் கருதலாம். குஜராத் முறையை இங்கும் நடைமுறைப்படுத்த அவர்கள் முனைந்திருக்கலாம் என்று ஒரிஸ்ஸா கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீதும், அவர்களின் உடமைகள் மீதும் நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரிஸ்ஸா அரசு கிறிஸ்தவர்களையும், அவர்களது உடமைகளையும் பாதுகாக்கத் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக பாதுகாப்புபடையை எனுப்ப வேண்டும் என்றும், இதற்கு காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உயர் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், னடந்த 8 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் நடைப்பெற்றதில்லை என்றும், இனிவரும் காலங்களில் மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.