பயங்கரவாத தடுப்புச் சட்டங்கள் கவலையளிக்கின்றன : தலைமை நீதிபதி!
சனி, 22 டிசம்பர் 2007 (20:03 IST)
பா.ஜ.க. ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்டு நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் (பொடா) போன்ற சட்டங்களை சில மாநில அரசுகள் நிறைவேற்ற முனைந்திருப்பது மனித உரிமை ரீதியிலான கவலைகளை உருவாக்கியுள்ளதென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்!
டெல்லியில் இன்று நமது நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பின் (IB) 20வது அமைப்புச் சொற்பொழிவாற்றிய பாலகிருஷ்ணன், பயங்கரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்படும் சட்டங்கள் அரசியலாக்கப்படவோ, மதவாத மயமாக்கப்படுவதோ ஆபத்தானது என்று எச்சரித்தார்.
நமது நாட்டில் மனித உரிமைகள் மிதிக்கப்பட்டு மறைக்கப்படுவதாகக் கூறிய தலைமை நீதிபதி, குற்றத்தடுப்பு நீதி அமைப்பு முறையை சீர்திருத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.
"பொடாவைப் போன்ற சட்டங்களை உருவாக்க சில மாநில அரசுகள் முனைந்திருப்பது மனித உரிமை ரீதியிலான கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட சட்டங்களை உருவாக்குவதற்கு முன்னர் அதற்கான அவசியம் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும். சட்டங்களை உருவாக்கி அப்படிப்பட்ட குற்றச் செயல்களை தடுப்பதை விட, நமது குற்றத்தடுப்பு நீதி அமைப்பை பலப்படுத்துவது சிறந்ததாகும்" என்று தலைமை நீதிபதி கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் மனித உரிமையைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது என்கின்ற இலக்கோடு இணைந்துதான் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் பா.ஜ.க. முதலமைச்சர்கள் சிலர் பயங்கரவாதத்தை ஒடுக்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசிய நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.