சோனியா காந்தி, நரேந்திர மோடி மீதான புகார்கள் தள்ளுபடி!
சனி, 22 டிசம்பர் 2007 (19:11 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் நரேந்திர மோடி அகியோர் விதிமுறைகளை மீறிப் பேசியது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையம் இன்று தள்ளுபடி சேய்தது.
தேர்தல் பிரச்சாரத்தில் 'சொராபுதீன் சுட்டுக் கொல்லப்பட்டது சரிதான்' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், 'குஜராத் ஆட்சியாளர்கள் மரண வியாபாரிகள்' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பேசிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சேவகி தீஸ்டா சேட்டல்வாத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனடிப்படையில் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட தாக்கீதுக்கு நரேந்திர மோடியும், சோனியா காந்தியும் அளித்த பதில் மனுக்களின் மீது முடிவு செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடந்தது.
இக்கூட்டத்தில், பதில் மனுக்களை தீவிரமாக ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உண்மைதான் முடிவு செய்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.
அதேநேரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் கவனமாக இருங்கள்" என்ற வார்த்தை இல்லை. இதனால் பா.ஜ.க. வினர் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.
இருவர் செய்ததும் ஒரே குற்றமாக இருக்கும்பட்சத்தில் சோனியா காந்திக்கு மட்டும் ஏனிந்த விதிவிலக்கு என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.