உள்நாட்டு பாதுகாப்பு : டெல்லியில் பிரதமர் தலைமையில் ஆய்வு!
Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2007 (14:42 IST)
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்து பிரதமர் தலைமையிலான உயர்மட்டக்குழு டெல்லியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சூழ்நிலைகளுடன் நக்சலைட்கள், தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. பிரதமர் தலைமையிலான இக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்று உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் துணை இராணுவப்படை, பாதுகாப்பு அமைப்புகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள சவால்களை திறம்பட கையாளுவது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாநில காவல் துறையை பலப்படுத்துவது, காவல் துறையினருக்கு பயிற்சி அளிப்பது, புலனாய்வு அமைப்புகளையும், செயல்பாடுகளை மேம்படுத்துவது, உள்நாட்டு பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை புலனாய்வு செய்வது, பெருநகர பாதுகாப்பு நடவடிக்கைகள், எல்லை பாதுகாப்பு மேலாண்மை, பயங்கரவாதத்தை எதிர்க் கொள்ள இருதரப்பு - சர்வதேச ஒத்துழைப்பு ஆகியன குறித்து நாள் முழுவதும் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் முடிவு மேற்கொள்ளப்பட உள்ளது.
புலனாய்வுத் தொடர்பான தகவல்களை மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் மாநில அரசுகளின் புலனாய்வு அமைப்புகள் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாக மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தும் என்றும் கூறப்படுகிறது. பயங்கரவாதச் செயல்களை விசாரிப்பதற்காக சிறப்பு மத்திய புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
ஆந்திரா, பீகார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் பெருகிவரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டு அதனை எதிர் கொள்ள செயல் திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி இதேபோன்று மாநாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.