11வது ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகள் மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம்!
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:45 IST)
அதிகமான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்டுள்ள நாடாகவும், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, தவறான வழியில் பயன்படுத்துதல், அவர்களின் உழைப்பையும், வாழ்வைச் சுரண்டும் நிலையும் நாடு முழுவதும் உள்ளதாகவும் , அதனை மாற்ற 11வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்த உள்ளதாகவும் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த 2005-ல் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் 3,508 -ம், 2003 ஆம் ஆண்டில் குழந்தை பிறந்த உடன் தாயின் சம்மதத்துடன் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் 187 -ம், கருவிலேயே குழந்தைகளை அழிக்கும் 87 நிகழ்வுகள் 2005 ஆம் ஆண்டில் நடைப்பெற்றுள்ளதாகவும்அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது கடந்த 2002 ஆம் ஆண்டில் 2,523 வழக்குகள் என்ற நிலையில் இருந்து 4,026 வழக்குகள் பதிவாகும் நிலைக்கு உயர்ந்துள்ளது. குழந்தைகள் மேம்பாட்டிற்கு 11 -வது திட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களுக்கு ஏற்கெனவே திட்டக்குழுவின் முழு அமர்வும், மத்திய அமைச்சரவையும் ஏள்கெனவே ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நாளை நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலும் இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் 11 -வது திட்டக் காலத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் 3 பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது . அதில் ஒரு பிரிவு குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டங்களை உள்ளடக்கியது. இதனைச் செயல்படுத்த தேசிய வளர்ச்சிக் குழுவில் நாளை ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
பெருகிவரும் வறுமையும், குடும்ப சூழ்நிலைகளும் பாலியல் தொழிலுக்கு பெண் குழந்தைகளை ஈடுபடுத்த அவர்களைக் கடத்துவது, விற்பது, வாங்குவது போன்ற சமூக அவலங்கள் நடைப்பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பெண்குழந்தைகள் பெரும்பாலும் சமூகத்தில் உள்ளவர்களால் விரும்பப்படாத நிலையில் ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் ஏற்பட்டுள்ள கீழிறக்கமான நிலை அதிகபட்ச குழந்தைத் திருமணங்கள் நடப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 44,000 குழந்தைகள் காணாமல் போவதாகவும், அதில் 11,000 குழந்தைகளைக் இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொன்றுத் தொட்டு குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்டு வரும் குழந்தைத் திருமணம், பொருளாதார ரீதியாக நசுக்குவது, தேவதாசி முறைகள் இன்னும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீடித்து வருவதாகவும் அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேபோன்று ஒழுக்கம் என்ற அடிப்படையில் குழந்தைகளை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் காலம் பாலமாக வீடுகளிலும் சரி,பள்ளிகளிலும் சரி துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது பண்பாட்டு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்து வரும் நிலையில் அதற்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வன்முறை சூழ்நிலை, கட்டாயமாக வெளியேற்றப்படும் சூழ்நிலை, வளர்ச்சித் திட்டங்களுக்காக குடும்பங்கள் வெளியேற்றப்படும் நிலை, போர், உள்நாட்டு சண்டை - சச்சரவுகள்,இயற்கைச் சீற்றங்கள், மத,இன கலவரங்கள் உள்ளிட்ட எல்லா சீர்கேடுகளும் குழந்தைகளை பெருமளவு பலிகொள்வதுடன், குழந்தைகளின் மனநிலையையும், சமுக முன்னேற்றத்தையும் பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.