பயங்கரவாதத்திற்கு விதை போட்டதே பா.ஜ.க. தான்: காங்கிரஸ்!
Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2007 (17:13 IST)
பாபர் மசூதியை இடித்ததன் மூலம் நமது நாட்டில் பயங்கரவாதம் வளருவதற்கு விதை போட்டதே பா.ஜ.க. தான் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாற்றி உள்ளது.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பா.ஜ.க கூறிய குற்றச்சாற்றுகளுக்கு பதிலளிக்கும் வகையில், செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, "பாபர் மசூதி போன்ற மதம் சார்ந்த பகுதிகளை சேதப்படுத்தியதன் மூலம் பயங்கரவாதம் வளருவதற்கான விதைகளை அத்வானி தலைமையில் பா.ஜ.க. தான் தூவியது" என்றார்.
"பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி காலத்தில்தான், அக்ஷர்தாம் கோவில், நாடாளுமன்றம் ஆகியவற்றின் மீதான தாக்குதல்கள், இந்திய விமானம் கடத்தப்பட்டது போன்ற பயங்கரவாத நிகழ்வுகள் அரங்கேறின" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அரசியல் தெரியாது என்ற குற்றச்சாற்றுக்கு பதிலளித்த மொய்லி, "மன்மோகன் சிங் உலகிலேயே சிறந்த பொருளாதார வல்லுநர். அவர் நம் நாட்டின் வளர்ச்சிக்காக யோசித்துக் கொண்டிருக்கிறார். அத்வானியின் அளவுக்கு தரமிறங்கிப் பேச வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை" என்றார்.