அவசரத்தால் வந்த வினை: பேருந்து மீது ரயில் மோதியதில் 17 பேர் பலி!
Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (18:48 IST)
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில், மினி பேருந்து ஓட்டுநர் அவசரப்பட்டு ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலியானார்கள்.
இந்தக் கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:
நசுர்சாக் என்ற கிராமத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் என 35 பேருடன் மினி பேருந்து ஒன்று அருகில் உள்ள நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது வழியில் உள்ள ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்துள்ளது. மூடுபனி கொட்டியதால் ரயில் பாதையும் முழுமையாகத் தெரியவில்லை.
எனவே, ரயில் வரவில்லை என்று நினைத்த பேருந்தின் ஓட்டுநர், கேட்டைத் திறக்குமாறு கேட் கீப்பரை வற்புறுத்தியுள்ளார். ஆனால் கேட் கீப்பர், ரயில் வரும் நேரம் என்று கூறி மறுத்துள்ளார்.
இருந்தாலும், பேருந்து ஓட்டுநரின் தொடர்ச்சியான வற்புறுத்தலின் இறுதியில், கேட்டைச் சிறிது திறப்பதற்கு ஒத்துக் கொண்ட கேட் கீப்பர் கேட்டைத் திறந்துள்ளார்.
இதையடுத்து மினி பேருந்தின் ஓட்டுநர் ரயில் பாதையைக் கடக்க முயன்ற போதுதான் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
குறிப்பிட்ட ரயில்வே கேட்டிற்கு அருகில் உள்ள அஜித்வால் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட லூதியானா- பெரோஸ்பூர் சட்லஜ் விரைவு ரயில் மினி பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.
ரயிலில் சிக்கிய பேருந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டபோது பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் வெளியில் தூக்கி வீசப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 5 குழுந்தைகள் உள்பட 17 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். ரயில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் இன்றித் தப்பினர்.
இந்த விபத்திற்கு ரயில்வே கேட் கீப்பரின் தவறுதான் முழுமையான காரணம் என்று மோகா காவல்துறை கண்காணிப்பாளர் எல்.கே.யாதவ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளார் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளளது.
இதற்கிடையில், விபத்தில் இறந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
பேருந்து ஓட்டுநர், கேட் கீப்பர் மீது வழக்கு பதிவு!
அவசரத்தினால் 17 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக விபத்தை நிகழ்த்திய மினி பேருந்து ஓட்டுநர், அவருக்கு உதவிய ரயில்வே கேட் கீப்பர் ஆகியோரின் மீது பிறரின் இறப்புக்கு காரணமாக இருத்தல் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
விபத்திற்குப் பிறகு நடந்த முதல்கட்ட விசாரணையில், ரயில் வருவது தெரிந்தவுடன் பேருந்தின் ஓட்டுநர் பயணிகளைக் காப்பாற்ற முயலாமல் குதித்துத் தப்பி ஒடிவிட்டார் என்று தெரியவந்துள்ளது. அவரைத் தேடுவதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.