பஞ்சாபில் பேருந்து - ரயில் மோதல் : 17 பேர் பலி!
வெள்ளி, 14 டிசம்பர் 2007 (13:10 IST)
பஞ்சாபில் மோகா மாவட்டத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினி பேருந்தின் மீது பயணிகள் ரயில் மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 8 குழந்தைகள் உட்பட 17 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர். 10 -க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இன்று அதிகாலையில் அஜித்வால், ஜக்ரான் ரயில் நிலையங்களுக்கு இடையில் நுச்சுர் சாக் என்ற கிராமத்தில் ஆளிள்ளா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற மினி பேருந்தின் மீது, லூதியானா- பெரோஸ்பூர் விரைவு ரயில் மோதியுள்ளது.
கடுமையான பனி மூட்டத்தின் காரணமாக, ரயில் வருவதை கவனிக்காத பேருந்தின் ஓட்டுநர், ரயில் பாதையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மினி பேருந்தில் 35 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் இருந்துள்ளனர். காயமடைந்தவர்களில் அதிகமானோர் கவலைக்கிடமாக இருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்ற கருதப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் வடக்கு ரயில்வே பொது மேலாளர் ஸ்ரீபிரகாஷ் தலைமையிலான அதிகாரிகளும், காவல்துறையினரும் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.