குஜராத்: பழங்குடியினர் வாக்குகளைப் பெற பா.ஜ.க., காங்கிரஸ் கடும் போட்டி!
Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:57 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள கையோடு, இரண்டாம் கட்டத் தேர்தலில் வாக்களிக்க உள்ள இடம் பெயர்ந்த பழங்குடியினரைக் கவரும் முயற்சியில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்காக, இடம் பெயர்ந்த பழங்குடியினர் அதிக அளவில் வசித்துவரும் மத்திய குஜராத் பகுதியில் அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பண மூட்டையுடன் முகாமிட்டுள்ளனர்.
''நகரங்களில் கூலி வேலை செய்யும் பழங்குடியினர் தங்களின் இருப்பிடங்களுக்கு வந்து வாக்களித்தால், அவர்கள் பெறும் கூலியைவிட இருமடங்கு பணம் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று சில பா.ஜ.க. வினர் வெளிப்படையாகவே அறிவிக்கின்றனர்.
பா.ஜ.க. விற்குச் சிறிதும் சளைக்காமல் காங்கிரஸ் கட்சியும் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பழங்குடியினர் மாநிலத்தின் எந்தப் பகுதியில் வசித்தாலும், தங்களின் சொந்த கிராமத்திற்கு வந்து வாக்களித்தால் பணம் தருவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
குஜராத்தில் வருகிற 16 ஆம் தேதி நடக்கவுள்ள இரண்டாம் கட்டத் தேர்தலில் 95 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கவிருக்கிறது. இதில் 42 தொகுதிகள் மத்திய குஜராத்தில் உள்ளன. இதிலும் 6 தொகுதிகள் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டவை.
ஜலோத், லிம்டி, தஹொத், லிம்கேடா, சன்கேடா, ரன்திக்பூர் ஆகிய இந்த ஆறு தொகுதிகளும் தஹொத் மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஆனால், இம்மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களில் பெரும்பாலானவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தொழிலுக்காக இடம் பெயர்ந்து விட்டனர்.