நாகாலாந்தில் 6 எம்.எல்.ஏ. க்கள் பதவி விலகினர்!
Webdunia
வியாழன், 13 டிசம்பர் 2007 (12:52 IST)
நாகாலாந்தில் இன்று சட்டப் பேரவை கூடியுள்ள நிலையில், நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர்.
ஆளும் நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் முக்கியக் கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த, கிஹொட்டோ ஹோலோஹன், கிபிலி சங்டம், காவோ லோத்தா, ஹெவோட்டோ சீமா, தாரி ஷெலியாங், ஹூக்காவி சீமா ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் நாகாலாந்து சட்டப் பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 60ல் இருந்து 49 ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே 2 அமைச்சர்கள் உட்பட 5 உறுப்பினர்கள் பதவி விலகிவிட்டனர்.
இதற்கிடையில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ விடுத்துள்ள அறிக்கையில், சமூக விரோதிகளைக் கொண்டு அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சியான காங்கிரஸ் முயற்சிக்கிறது என்று குற்றம்சாற்றி உள்ளார்.
இன்று நடக்கும் நாகாலாந்து சட்டப் பேரவையின் 16 ஆவது கூட்டத்தில், காங்கிரஸ் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரவிருக்கிறது. அப்போது ஆளும் நாகாலாந்து ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மேலும் சில கட்சிகள் அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கருதப்படுகிறது.