மேலும், ஹிந்து பயங்கரவாதம் பற்றிய பேச்சுக்காக காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங், ஹிந்துக்களுக்கு எதிரானவர் சோனியா காந்தி என்று கூறியதற்காக பா.ஜ.க. தலைவர் வி.கே.மல்கோத்ரா ஆகியோருக்கும் தாக்கீது அனுப்பப்பட்டது.
இவர்கள் மூன்று பேரும் நாளைக்குள் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
சோனியாவுக்கு எதிராக குஜராத் மாநில பா.ஜ.க. பொதுச் செயலர் அனுப்பியுள்ள புகாரில்,"எனது சகோதர சகோதரிகள், குழந்தைகளில் பலரும் வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளனர். அரசிடம் இருந்து பாதுகாப்பு பெற்றுவரும் குற்றவாளிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளனர். குஜராத் ஆட்சியாளர்கள், பொய்யர்களாகவும், துரோகிகளாகவும் அச்சம், மரண வியாபாரிகளாகவும் இருப்பதுதான் இன்றைய உண்மை நிலையாகும்'' என்று சோனியா பேசியதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் நகலும், டிசம்பர் 1 ஆம் தேதியன்று பேசிய அவருடைய பேச்சின் குறுந்தகடும் சோனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், நரேந்திர மோடி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மோடியின் பதிலை கவனமாக பரிசீலிக்க வேண்டி இருப்பதால், அதுபற்றி முடிவு செய்ய அவகாசம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறுபான்மையோருக்கு நல உதவி பற்றி, மத்திய அரசு சார்பில் குஜராத் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்றும், அதுகுறித்து பிரதமர், சம்பந்தப்பட்ட துறையின் மந்திரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் செய்துள்ளது.