இராமரைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை : கபில் சிபல்!
சனி, 8 டிசம்பர் 2007 (20:07 IST)
இராமனைப் பற்றி பேசும் நரேந்திர மோடி, குஜராத்தில் இராம ராஜ்ஜியமா நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராமனை மோடி உண்மையிலேயே நம்பியிருந்தால் குஜராத்தில் ராமராஜ்ஜியம் அல்லவா இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நடப்பது என்ன? உண்மையில் நரேந்திர மோடி ஒரு இராம பக்தரே அல்ல. இராமனை நம்பாத ஒருவர் என்ன காரியங்களைச் செய்வாரோ அது போன்ற செயல்களைத்தான் தான் குஜராத் மக்களுக்கும், குடியேறியவர்களுக்கும், அகதிகளுக்கும் முதல்வராக இருந்த போது நரேந்திர மோடி செய்துள்ளார் என்று கபில்சிபல் சாடியுள்ளார்.
குஜராத்தில் நடந்த என்கவுண்டர்களை ஆய்வு செய்ததில், குஜராத் மாநில காவல்துறை அதிகாரியாக இருந்த மோடியின் தீவிர பக்தரான டி.ஜி.வன்சராவைக் கைது செய்து சிறையில் அடைத்ததால்தான் பின்னர் அம்மாநிலத்தில் ஒரு என்கவுண்டர் நிகழ்வும் நடைபெறவில்லை. இதற்கு முன்பு 14 என்கவுண்டர்கள் நடைப்பெற்றதில், 10 என்கவுண்டர்களில் வன்சராவுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. மோடிக்கு இதுபோன்ற வேலைகளைச் செய்வதற்காகவே வன்சரா பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது இப்போது தெளிவாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் மனைவி காசூர் பீவி, பிரஜாபதி ஆகியோருக்கு என்ன ஆனது என்பது குறித்து குஜராத் மாநில அரசு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவேண்டும் என்றும், இவற்றுத்தெல்லாம் மோடி நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டும் என்றும் கபில்சிபல் கூறியுள்ளார்.
நரேந்திர மோடி பற்றி சோனியா காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது “மரண வியாபாரி” என்று குறிப்பிட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கபில்சிபல், அதில் என்ன தவறு இருக்கிறது என்று திருப்பிக் கேட்டார். அந்த நிலையில் தான் மாநில அரசின் பல்வேறு அமைப்புகள் மோடியின் ஆட்சியில் செயல்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில அரசின் சார்பில் ஆஜரான உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.எஸ்.துல்சி, தற்போது அந்த வழக்கில் இருந்து விலகியுள்ளார். இது குறித்து மோடி இதுவரை எதுவும் கூறவில்லை என்று கபில்சிபல் கூறினார். வன்சரா குற்றவாளி என்றும் அவர் தணடிக்கப்பட வேண்டும் என்றும் கே.டி.எஸ்.துல்சி தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
இராமனைப் பற்றி மோடி பேச விரும்பினால், குஜராத்தில் ராம ராஜ்ஜியம் இருக்க வேண்டும். இராமர் மீது எங்களுக்கு நம்பிக்கையுண்டு என்று காங்கிரஸ் கட்சி எப்போதோ சொல்லிவிட்டது என்று கூறியுள்ள கபில்சிபல், எப்போது காங்கிரஸ் கட்சி இராமன் மீது நம்பிக்கையில்லை என்று கூறியது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சிகள் கடவுள் மீது நம்பிக்கை கொள்ள இயலாது. ஆனால் மனிதர்கள் கடவுள் மீது நம்பிக்கைக் கொண்டிருக்க முடியும். உதாரணமாக நான் ஒரு இந்து. எனக்கு இராமர் மீது நம்பிக்கையள்ளது, வேறு சிலருக்கு அது இல்லாமலிருக்கலாம் என்றும் கபில்சிபல் தெரிவித்துள்ளார்.
நான் குஜராத் செல்லும் போதெல்லாம் வளர்ச்சி குறித்து பேசுவேன். அப்போதெல்லாம் யாராவது வளர்ச்சி தொடர்பான விவாதத்தில் பங்கெடுக்க வந்துள்ளார்களா என்று பார்த்தால் யாருமே வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக தெரியவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைச் சுற்றியுள்ளவர்கள் எல்லாம் தவறானவர்கள், அதனால்தான் மதவாத கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதிலேயே அவர் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் கபில்சிபல் கூறினார். ஜனநாயகத்தில் இது போன்றவை நடக்கக் கூடாது. என்ன செய்வது குஜராத்தில் அவ்வாறு நடப்பது வருத்தத்திற்குரியது என்று கூறினார்.