மோடி அரசை அகற்றுங்கள்-பூரி சங்கராச்சார்யார் வேண்டுகோள்

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (12:45 IST)
கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்த வன்முறைக்குக் காரணமான நரேந்திர மோடி அரசை மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து அகற்றிட வேண்டும் என்று பூரி சங்கராச்சாரியார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீய, நியாயமற்ற நடவடிக்கைகளுக்க நரேந்திர மோடி அரசை அகற்றிட வேண்டும் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள பூரி சங்கராச்சாரியார் சாமி அதோக்ஷானந்த் தேவ் தீர்த்தா, சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை கெடுத்ததன் மூலம் நரேந்திர மோடி அரசு இந்து சமுதாயத்தினரை வெக்கி தலைகுனிய வைத்துவிட்டது என்றும், மோடி அரசின் தீய நடவடிக்கைகள் அனைத்தும் தற்போது முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

தன்னை வளர்ச்சியின் நாயகன் (விகாஸ் புருஷ்) என்றும், இந்துக்களின் நலன் காப்பவராகவும் மோடிக் கூறிக் கொண்டது பொருளற்றதாகி விட்டது என்று அதோக்ஷானந்த் தேவ் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலப் பிரச்சினையில் மோதிக் கொண்டது போல மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றை ஒன்றை எதிர்த்துக் கொள்ளாமல் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்யும் மாபெரும் சவாலை ஒன்றிணைந்து ஏற்று அகற்றி ஜனநாயகக் கோயிலை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்துத்துவா அமைப்புகள் அனைத்தும் இரட்டை வேடம் போடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள சுவாமி அதோக்ஷானந்த், மோடி அரசின் தவறான கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் எதிர்க்கும் அவர்கள், வெளிப்படையாக வெளியே வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வளவு தவறுகளைச் செய்ததற்குப் பிறகும், மோடி அரசு ஐந்தாண்டு காலம் நீடித்தது மிக துரதிருஷ்டவசமானது என்று கூறியுள்ள அவர், மோடி அரசின் திசைதிருப்பலில் மயங்கிவிடாமல் அதனை அகற்றுவதற்கான வாய்ப்பை குஜராத் மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்