காவல் துறையினருடன் மோதியதால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட சொராபுதீன் ஷேக் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்று குஜராத் முதலமைச்சர் மோடி மன்னிப்பு கேட்காவிட்டால், குஜராத் அரசிற்காக வாதாடும் பொறுப்பில் இருந்து விலகுவேன் என்று மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி கூறியுள்ளார்!
குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, போலி என்கவுண்டரில் சொராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசினார்.
"சொராபுதீன் போன்றவர்களுக்கு எப்படிப்பட்ட முடிவு அமைய வேண்டுமோ அதுதான் நடந்துள்ளது. அதற்காக என்னை என்ன செய்ய முடியும். தூக்கில் போட்டுவிடுவீர்களா?" என்று மோடி ஆவேசமாகப் பேசினார்.
மோடி இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சொராபுதீன் ஷேக், போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார் என்று உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு வாக்மூலம் தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் கொல்லப்பட்ட முறையை நியாயப்படுத்தி மோடி பேசியது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குஜராத் மாநில அரசு சார்பாக வாதிட்டுவரும் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துள்சி கூறியுள்ளார்.
"காவல் துறையினரால் என்கவுண்டர் என்ற பெயரில் சொராபுன் கொல்லப்பட்டது படுகொலை என்று நீதிமன்றத்தில் அரசு சார்பாக வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அப்படியுள்ள நிலையில், கொல்லப்பட்டவரை பயங்கரவாதி என்றும், அவருக்கு உரிய முடிவுதான் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மோடி கூறியுள்ளது ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தில் தனது அரசு தாக்கல் செய்த வாக்குமூலத்திற்கு எதிராக அம்மாநில முதலமைச்சரை எவ்வாறு இப்படி பேசலாம். இதனால் அந்த வழக்கின் நிலை கடுமையாக பாதிக்கப்படும். தான் பேசியதற்கு உரிய விளக்கத்தை குஜராத் முதல்வர் அளிக்க வேண்டும். அவ்வாறு பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இவ்வழக்கில் குஜராத் அரசின் சிறப்பு வழக்கறிஞராக தொடரமாட்டேன்" என்று துள்சி கூறியுள்ளார்.