தடை செய்யப்பட்ட மருந்துகள் குவிக்கப்படும் நாடாகிறது இந்தியா: உச்ச நீதிமன்றம்!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (16:05 IST)
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் குவிக்கும் நாடாக இந்தியா மாறிவருகிறது என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கு பற்றிய விபரம் வருமாறு :

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மூன்று வயது குழந்தை சர்தாக் பர்தானுக்கு 1996 ஆம் ஆண்டு கடுமையான காய்ச்சல் வந்தது. இதற்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஆர்.என்.மெக்ரோத்ரா சிப்ரோப்ளாக்சின் (Ciprofloxacin ) என்ற மருந்தை கொடுத்தார். இந்த மருந்து கொடுத்த பிறகு, அந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்சை பாதிக்கப்பட்டது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட சிப்ரோப்ளாக்சின் மருந்தை சிறுவனுக்கு கொடுத்ததால் பாதிப்பு ஏற்பட்டது என அவனின் பெற்றோர் உத்தர பிரதேச மாநில நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தில் வழக்கு தொடுத்தனர் இந்த மருந்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட அரசின் ஆணையையும் தாக்கல் செய்தனர். அத்துடன் சிறுவனுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர்.

இதை விசாரித்த உ.பி. மாநில நுகர்வோர் பாதுகாப்பு மன்றம் சிகிச்சை அளித்த டாக்டர் மீது எந்த குற்றமும் இ‌ல்லை என்று தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய அமர்வு நீதி மன்றம் விசாரித்தது.

சிறுவன் சர்தாக் பர்தான் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சர்வேஸ் பிஸ்ராசிய வாதிடும் போது, இந்த மருந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட மருந்தை கொண்டு வந்து கொட்டும் இடமாக இந்தியா மாறி வருகிறது என்ற கூறினார்கள்.

நீதிபதி சிங்வி கூறும் போது, ”அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பல மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனை தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை இந்தியாவில் கொண்டு வந்து குவிக்கின்றனர். இவை மிருகங்களுக்கு கொடுத்து மட்டும் பரிசோதிக்கப்படுவதில்லை, மனிதர்களுக்கும் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறத” என்று கூறினார்.

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்தை சிறுவனுக்கு கொடுத்ததால், அவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்பளித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்