அயோத்தி விவகாரத்தில் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளிவைப்பு!
வியாழன், 6 டிசம்பர் 2007 (14:19 IST)
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரம் தொடர்பாக சமாஜ்வாதி, பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை தள்ளி வைக்கப்பட்டன.
மக்களவை இன்று கூடியவுடன் அவைக்கு நடுவில் வந்து குழுமிய சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள், பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர்.
இதை எதிர்த்து முழக்கமிட்ட பா.ஜ.க. உறுப்பினர்கள், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உடனடியாக ராமர் கோவில் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது எழுந்த சமாஜ்வாதி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன், அயோத்தி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட லிபரான் ஆணையத்தின் ஆயுட்காலம் 42 முறை நீட்டிக்கப்பட்டுவிட்ட நிலையில், குற்றவாளிகளுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.
இதைக் கண்டித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் முழக்கமிட்டபடி அவையின் மையத்திற்கு வரத்தொடங்கினர்.
இதனால் அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் 12 மணி வரை தள்ளிவைத்து அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி உத்தரவிட்டார்.
இதையடுத்து 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால் அவை மதியம் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.
மாநிலங்களவையும் தள்ளி வைப்பு!
இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் கேள்வி நேரத்திற்கு முன்னதாக, பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சமாஜ்வாதி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அவையின் மையப்பகுதிக்கு வந்த சமாஜ்வாதி உறுப்பினர்கள், பாபர் மசூதி இடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர்.
இதை எதிர்த்து பா.ஜ.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவையில் கூச்சலும் குழப்பமும் நிலவியது. இதையடுத்து அவையை 12 மணி வரை தள்ளிவைத்து அவைத் தலைவர் ஹமீது அன்சாரி உத்தரவிட்டார்.
பின்னர், 12 மணிக்கு அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதையடுத்து அவைத் தலைவர் இருக்கையில் இருந்த பேராசிரியர் குரியன் அவையை மதியம் 2 மணி வரை தள்ளிவைத்தார்.