மத்திய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (18:03 IST)
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் கருத்துகளுக்கு மத்திய அரசு மதிப்பளிக்கவில்லை என்று கூறி இடதுசாரிகளும், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவையில் இன்று இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறோம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதை எதிர்த்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்த மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஃபார்வார்டு பிளாக் கட்சிகளின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பாலான உறுப்பினர்கள் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்த பிறகும், அவற்றை மதிக்காமல் மத்திய அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாற்றினர்.
மக்களவையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி அணுசக்தி ஒப்பந்தம் மீதான விவாதம் நடந்தபோது, அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முக்கியமான நடவடிக்கையின் போதும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவோம் என்று அளித்த உறுதிமொழியை மத்திய அரசு மீறிவிட்டது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
''பிரணாப் முகர்ஜி இன்று மாநிலங்களவையில் தெரிவித்த விளக்கத்தில் இருந்து, அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்திய பிறகு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்தால் போதும் என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது'' என்றும் அவர்கள் கூறினர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவைத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா கூறுகையில், ஜனநாயகத்திற்கு ஏற்றுக்கொண்டுள்ள மத்திய அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பு நாடாளுமன்றத்தின் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார்.
முன்னதாக, மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சீதாராம் யச்சூரி, பா.ஜ.க. உறுப்பினர் ஜஸ்வந்த் சிங் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ''நான் உறுப்பினர்களின் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அனுமதியுங்கள்'' என்று கூறினார்.
இதையடுத்து பா.ஜ.க., இடதுசாரிகள், அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.