அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீர்வோம் : மத்திய அரசு!
Webdunia
புதன், 5 டிசம்பர் 2007 (16:39 IST)
எந்த எதிர்ப்புக்கிடையிலும் ''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அணுசக்தி ஒப்பந்தத்தை நிச்சயமாகச் செயல்படுத்துவோம்'' என்று மத்திய அரசு இன்று உறுதியுடன் தெரிவித்துள்ளது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று இரண்டாவது நாளாக விவாதம் நடந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் விளக்கமளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பூகோள அரசியல் மாற்றங்களைப் பொறுத்து தேவைப்படுமானால் அணுஆயுதங்களைத் தயாரிப்பது, சோதனை நடத்துவது ஆகிய தனது உரிமைகளை இந்தியா ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்றார்.
அமெரிக்கா இயற்றியுள்ள ஹைட் சட்டத்தில் இந்தியாவுக்குப் பாதகமான அம்சங்கள் இருப்பதை ஒப்புக் கொண்ட அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவை ஆளப்போவது அணுசக்தி ஒப்பந்தமே தவிர ஹைட் சட்டமல்ல என்றதுடன், நமது நாடு அணுஆயுதச் சோதனை நடத்துவதையோ அணுஆயுதங்களை புதுப்பிப்பதையோ யாராலும் தடுக்க முடியாது என்றார்.
சரியாக 1 மணி நேரம் தனது விளக்கத்தை அளித்த அமைச்சர் பிரணாப், அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அவசரப்பட வேண்டாம் என்றும், நாடாளுமன்றத்தின் கருத்துகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் பா.ஜ.க., மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் சரியான காரணம் இல்லை என்று கூறிய அவர், ''அவையின் கருத்துகளை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், தற்போது ஒப்பந்தத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளை தொடர அனுமதிக்க வேண்டும்'' என்றார்.
அணுசக்தியில் இருந்து மின்சாரம் பெறுவதற்கு அதிகமாகச் செலவாகும் என்ற கருத்தை வன்மையாக மறுத்த பிரணாப், நமது நாட்டில் செல்பேசி அறிமுகம் செய்யப்பட்ட போதும், தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்ட போதும் இதேபோன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன என்று குறிப்பிட்டார்.
''இந்தியா தனது அணுசக்தி வணிகத்தை சர்வதேச அளவில் விரிவுபடுத்துவதற்குத் தேவையான கடவுச் சீட்டுதான் அணுசக்தி ஒப்பந்தம், இதைச் செயல்படுத்தினால் அளவற்ற பொருளாதார வளர்ச்சி ஏற்படும். நாம் சுதந்திரமடைந்தது முதல் கண்ட கனவுகள் எல்லாம் நிறைவேறும்'' என்று அவர் கூறினார்.