''கூடங்குளம் அணு மின் நிலையத்தில அணு உலை கட்டுமானம் தொடர்பாக ரஷ்யாவுடன் ஒப்பந்தம கையெழுத்தாகாததற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணம் அல்ல'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மாநிலங்களவையில், செவ்வாய்க்கிழமை பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா கூறிய குற்றச்சாட்டுக்கு, பிரதமர் மன்மோகன்சிங் பதிலளிக்கையில், ''ஒப்பந்தம் கையெழுத்தாகாததற்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணம் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. அணு உலைகள், அதற்கான மூலப் பொருள்களை வழங்குவது தொடர்பாக சில பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இதுகுறித்து மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ), அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் (என்எஸ்ஜி) ஆகியவற்றுடன் பேச்சு நடத்தி சில விவரங்களைப் பெற வேண்டியுள்ளது. அதனால்தான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை'' என்றார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்படும் அணுமின் நிலையத்துக்குக் கூடுதலாக நான்கு உலைகளை வழங் ஏற்கனவே ரஷ்யா ஒப்புக் கொண்டுள்ளது என்றும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இப்பிரச்சனையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், யஷ்வந்த் சின்ஹாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமை, அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் ஆகியவை அனுமதி அளித்த பிறகே இந்தியா - ரஷ்யா ஒப்பந்தத்தை செயல்படுத்த முடியும் என்பது வெளிப்படையான விஷயமாகும்.ஆனால், எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சனைக்கு அமெரிக்காவின் நிர்ப்பந்தம் காரணம் என தவறான தகவலைப் பரப்பி வருகின்றன என்றார் மன்மோகன் சிங்.
தொடர்ந்து பேசிய யஷ்வந்த் சின்ஹா, ''அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அண்மையில் ரஷ்யா சென்றிருந்தபோது அவரால் அந்நாட்டு அயலுறவு அமைச்சரைக் கூட சந்திக்க முடியவில்லை. அதேபோல அண்மையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணியால் சந்திக்க முடியவில்லை. அனைத்துக்கும் மேலாக ரஷ்யாவில் 28 மணி நேர பயணத்தை இந்திய பிரதமர் மேற்கொண்டது துரதிரஷ்டவசமானது'' என்று சின்ஹா குறிப்பிட்டார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு அணு உலைகளை வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முன்பே கையெழுத்திடாதது ஏன்? மாநாட்டுக்கு முன்னதாகவே இந்திய அதிகாரிகளுடன் ரஷ்ய அமைச்சர்கள் பேச்சு நடத்தியதன் பின்னணி என்ன? என்று சின்ஹா கேட்டார்.
இதனால் கோபமடைந்த பிரதமர், "நீங்கள் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஜப்பான் சென்றீர்கள். ஆனால் அங்கு ஜப்பான் நிதி அமைச்சரையே உங்களால் சந்திக்க முடியவில்லை,'' என்று கூறினார்.