வேலையிழப்பைத் தடுக்க நடவடிக்கை!
Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (18:53 IST)
நமது நாட்டில் சுமார் 20 லட்சம் பேருக்கு மேல் வேலையிழக்கும் அபாயம் உள்ள கைவினைப் பொருட்கள், கடல் பொருட்கள், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தொடர்பான ஏற்றுமதித் தொழில்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத், ஏற்றுமதி வளர்ச்சி குறைவாக உள்ள தொழில்களைக் கண்டறிந்து கூடுதல் சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும், ''பொதுவான ஏற்றுமதித் துறையின் வளர்ச்சி அதிகரித்து வந்தாலும், கடல் பொருட்கள், தோல் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட சில குறிப்பிட்ட துறைகளில் ஏற்றுமதி விகிதம் குறைந்து வருகிறது. இதனால் சுமார் 20 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வேலையிழப்பு அபாயத்தைத் தடுக்கும் வகையில் குறிப்பிட்ட தொழில்களில் ஏற்றுமதிக்கு அதிக சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார் அமைச்சர் கமல்நாத்.