தேசிய சுரங்கக் கொள்கை அடுத்த ஆண்டு அறிமுகம்!
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (15:13 IST)
சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டுவதைத் தடை செய்யும் தேசிய சுரங்கக் கொள்கை அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சுரங்கத்துறை இணையமைச்சர் சுப்பராமி ரெட்டி, ''தேசியச் சுரங்கக் கொள்கை மீது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அடுத்த கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்'' என்றார்.
''2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சட்டவிரோதமாக இரும்புச் சுரங்கம் வெட்டியதற்காக ஒரிசாவில் 483 வழக்குகளும், கர்நாடகாவில் 340 வழக்குகளும், ஆந்திராவில் 15 வழக்குகளும், சத்தீஷ்கர், கோவா மாநிலங்களில் தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜூலை 2005 முதல் ஜூன் 2007 வரை சட்டவிரோதத் தாதுச் சுரங்கங்கள் தொடர்பாக 69,003 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 12,780 வழக்குகளில் நீதிமன்றங்கள் மூலம் ரூ.137.27 கோடி அபராதம் பெறப்பட்டுள்ளது'' என்று மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தெரிவித்தார்.