பாரம்பரிய சின்னங்களுக்கு பயங்கரவாதத்தால் அச்சுறுத்தல் : பிரதமர் எச்சரிக்கை!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (19:47 IST)
இயற்கையாக அமைந்தவை, மானுட வரலாற்றில் சின்னங்களாக மனிதனால் உருவாக்கப்பட்டவை என்று உலகெங்கிலும் உள்ள பாரம்பரியச் சின்னங்களுக்கு பயங்கரவாதிகளாலும், தீவிரவாதிகளாலும், மத அடிப்படைவாதிகளாலும் அச்சுறுத்தல் உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார்!

தலைநகர் டெல்லியில், பாரம்பரியச் சின்னங்களை காப்பதற்கான தேச அறக்கட்டளைகளின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ஆப்கானிஸ்தானில் பாமியன் மலைப்பகுதியில் செதுக்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டது இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களுக்கு வெளிப்படையான சான்றாகும் என்று கூறினார்.

மானுடத்தின் பாரம்பரிய கட்டடங்களும், சின்னங்களும் மத அடிப்படைவாதத்தின் எண்ணங்களாலும், நம்பிக்கைகளினாலும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளது என்றும், அதனால் அவைகள் அழிக்கப்படும் அபாயத்தில் உள்ளன என்றும் கூறிய பிரதமர், மானுடத்தின் கடந்த காலத்தின் அடையாளமாகத் திகழும் எதையும் அழிப்பதற்கு எவரொருவருக்கும் உரிமை இல்லை என்ற செய்தியை இந்த மாநாடு பகர்ந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் உள்ள பாரம்பரியச் சின்னங்களும், வரலாற்றுச் சுவடுகளும், ஆக்கிரமிப்பாளர்களாலும், இந்நாட்டைக் கண்டுபிடிக்க வந்தவர்களாலும், அடிமைப்படுத்திய காலனி ஆதிக்க சக்திகளாலும், வன்முறையாளர்களாலும், திருடர்களாலும் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக பாதிப்பிற்குள்ளாகி உள்ளன என்று கூறிய மன்மோகன் சிங், நமது பாரம்பரிய, வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கும் பணியில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் முழுமையாக பங்குபெற வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் பண்பாட்டு, பாரம்பரியச் சின்னங்களை காப்பாற்றவும், மேம்படுத்தவும் உணர்வுப்பூர்வமான அவசியம் உள்ளது. ஆனால் அதனை ஈடேற்றுவதில் நாம் அதிகம் வெற்றிபெறவில்லை என்று மன்மோகன் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்