முதியோர் நலனுக்கு ரூ.265 கோடி: திட்டக் குழு பரிந்துரை!
Webdunia
திங்கள், 3 டிசம்பர் 2007 (18:29 IST)
மூத்த குடிமக்களின் நலனுக்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை 11 ஆவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் ரூ.265 கோடியாக அதிகரிக்குமாறு திட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் மீரா குமார், தனது அமைச்சகத்தால் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள முதியோர் இல்லங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
''தற்போது முதியோர் இல்லங்கள் இல்லாத கிராமங்கள், புறநகர் பகுதிகளில் புதிதாக முதியோர் இல்லங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கிராமப் புறங்கள், புறநகர்ப் பகுதிகளில் முதியோர் இல்லங்களை நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்குவது என்ற வகையில் புதிய கொள்கையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், ஒருசில பகுதிகளில் நிறைய இல்லங்கள், மற்ற பகுதிகளில் குறைவான இல்லங்கள் என்ற சமநிலையற்ற தன்மையை தவிர்க்க முடியும்.
நமது நாட்டின் மூத்த குடிமக்களின் நலன்களில் மத்திய அரசு தீவிர அக்கறை செலுத்தி வருகிறது. அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு 10 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.77.34 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால் 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ.265 கோடி ஒதுக்க திட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மராட்டியத்தில் நிறைவேற்றப்பட்டதைப் போல, வயதானவர்கள் அவர்களின் குழந்தைகளிடம் இருந்து பெறும் நலன்களை உறுதிசெய்யும் வகையிலான சட்ட வரைவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, நிலைக் குழுவின் முன்பு உள்ளது'' என்று அமைச்சர் மெய்ரா குமார் தெரிவித்துள்ளார்.