யூரியா தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (18:04 IST)
நாடு முழுவதிலும் யூரியா தட்டுபாடின்றி கிடைக்க அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது என்று இணை அமைச்சர் ஹான்டிக்யூ மக்களவையில் தெரிவித்தார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய இராசயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சர் பி.கே. ஹான்டிக்யூ பதில் அளிக்கையில் கூறியதாவது.

நாட்டின் எல்லா பகுதிகளிலும் யூரியா உரம் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

தற்போது ஒவ்வொரு மாநிலமும் மாத வாரியாக, மாவட்ட வாரியாக தேவைப்படும் யூரியா பற்றியம், எந்த நிறுவனத்தில் இருந்து தேவைப்படுகின்றது என்பது பற்றிய விபரத்தை தயாரிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு மாவட்ட வாரியாக யூரியாவின் தேவை பற்றி மட்டுமே கணக்கெடுக்கப்பட்டது.

உரத் தொழிற்சாலைகள் ஒப்பந்தப்படி மாவட்டங்களுக்கு யூரியா வழங்கியதற்கு பிறகே, அவைகளுக்கு மாணியம் வழங்கப்படுகிறது. உரத் தொழிற்சாலைகள் மாவட்டங்களுக்கு உரத்தை வழங்குவதற்கான சரக்கு போக்குவரத்து கட்டணமும் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு முன்பே உரத்தின் தேவை பற்றி முன் கூட்டியே திட்டமிடப்படுகிறது.

உரத் தொழிற்சாலைகளும், இறக்குமதி செய்து விநியோகிப்பவர்களும் ஒப்பந்தப்படி உற்பத்தி, இறக்குமதி அளவு, விநியோகம், மாவட்ட மட்டத்தில் விநியோகம், விற்பனை ஆகியவற்றை இணையம் மூலமாக கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் உரம் தட்டுபாடில்லாமல் கிடைக்க அவைகளின் அரசு துறைகளை உரத் தொழிற்சாலைகள், இறக்குமதியாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதை பலப்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. தாலுகா வாரியாக தேவைப்படும் உரத்தின் தேவைகளை கணக்கில் எடுக்க வேண்டும். அத்துடன் தாலுகா வாரியாக உரம் விநியோகிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

தாலுகா மட்டத்தில் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க விநியோக அமைப்பை பலப்படுத்தும் படி கூறப்பட்டுள்ளன. மாநிலங்களில் எல்லா பகுதிகளிலும் உரம் கிடைப்பதற்கு தற்போதுள்ள ரயில் போக்குவரத்து வசதி போதுமானதா என்பதை பரிசீலித்து, இதை மேலும் மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றிய ஆலோசனைகளை வழங்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்