அணு ஆயுதச் சோதனைக்கு அணு சக்தி ஒப்பந்தம் தடை இல்லை : பிரதமர் உறுதி!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (17:46 IST)
நமது நாட்டின் பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்துவதற்கு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்தவிதத்திலும் ஒரு தடையாக இருக்காது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் மீது மக்களவையில் நடைபெற்று வரும் விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் ரூப்சந்த் பால், நமது பாதுகாப்பிற்காக அணு ஆயுதச் சோதனை நடத்தும் உரிமையை இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் பறிக்கிறது என்று பேசினார்.

அப்பொழுது எழுந்து குறுக்கிட்டுப் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "எங்களுடைய அறிவிற்கு எட்டிய வரை அணு ஆயுதச் சோதனை நடத்துவதற்கான அவசியம் எழும்போது இந்த ஒப்பந்தத்தில் உள்ள எதுவும் அதனை தடுப்பதாக இல்லை. இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நமது நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கிறது" என்று பதிலளித்தார்.

அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி பேசும்போது, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால் போக்ரான்-3 சோதனை நடக்காது என்று கூற, மீண்டும் எழுந்து குறுக்கிட்ட பிரதமர், 1998ல் போக்ரான்-2 சோதனை நடத்தப்பட்ட பிறகு, இதற்குமேல் அணு ஆயுதச் சோதனை நடத்தப்படாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டது பா.ஜ.க. அரசுதான் என்று கூறியது மட்டுமின்றி, அதைத்தான் தமது அரசு கடைபிடிப்பதாகக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்