சாலை விபத்துகளுக்கு ஓட்டுநர்களே காரணம்: மத்திய அரசு!
புதன், 28 நவம்பர் 2007 (17:22 IST)
தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகரித்துவரும் விபத்துகளுக்கு ஓட்டுநர்களின் தவறும், வாகனங்களில் உள்ள குறைபாடுகளுமே காரணம் என்றும், இவற்றில் பாதசாரிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இன்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை இணையமைச்சர் முனியப்பன் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், முறைகேடாக முந்துதல், அதிவேகம் ஆகியவற்றினால அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. பெரும்பாலான மரணங்கள் தலையில் அடிபடுவதால் நிகழ்கின்றன என்று கூறியுள்ளார்.
''சாலை விபத்துகளுக்கு சாலைப் பயன்பாட்டாளர்களின் நடத்தை 78 விழுக்காடும், வாகனங்களின் குறைபாடு 11 விழுக்காடும், மோசமான சாலைகள் 7 விழுக்காடும், போதிய வெளிச்சமின்மை, அதிக வெளிச்சம் ஆகியவை 3 விழுக்காடும் காரணம் ஆகும்.
சாலை விதிகளைப் பற்றிய விழிப்புணர்வின்மை, போதுமான நடைபாதை வசதிகள் இல்லாமை ஆகியவற்றினால் பாதசாரிகள்தான் அதிகளவில் விபத்துகளில் சிக்குகின்றனர். சாலை விபத்துகளை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகளில் பாதசாரிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
பெரும்பாலான விபத்துகளுக்கு ஓட்டுநர்களே காரணமாக உள்ளனர். சரக்கு வாகனங்களுக்கு அடுத்தபடியாக கார்கள் அதிகமாக விபத்துகளில் சிக்குகின்றன. இரவு நேரங்களில் பயணம் செய்யும் டிரக்குகளாலும் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. அதிவேகம், அறியாமை ஆகியவற்றுடன், வேண்டுமென்றே விதிகளை மீறுவதாலும் விபத்துகள் நடக்கின்றன.
சாலை விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் 4 வழிப் பாதைகளாகவும், 6 வழிப் பாதைகளாகவும் மாற்றப்படுகின்றன. கனரக வாகனங்களுக்கு கடுமையான தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகன ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன'' என்று அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.