28 கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளன: மத்திய அரசு!

செவ்வாய், 27 நவம்பர் 2007 (19:59 IST)
கடந்த 21 ஆம் தேதிவரை மரண தண்டனை பெற்ற 28 கைதிகளின் கருணை மனுக்கள் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ராதிகா செல்வி மக்களவையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்துபூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், தமிழகத்தைச் சேர்ந்த ஆர். கோவிந்தசாமி, உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஸ், ரவீந்தர், சுரேஷ், பிரகாஷ், ஷெ ராம், ஷியாம் மனோகர் ஆகியோரின் கருணை மனுக்கள் 1998 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்றத் தாக்குதலில் குற்றவாளியான முகமது அப்சலின் கருணை மனு 2006 ஆம் ஆண்டிலும், ஹரியானாவைச் சேர்ந்த சோனியா, சஞ்சீவ் ஆகியோரின் கருணை மனுக்கள் இந்த ஆண்டும் பெறப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் வரை நமது நாட்டின் பல்வேறு சிறைகளில் மொத்தம் 3,45,648 பேர் தண்டனைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்