உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் மாநிலங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை அடுத்து உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் கூட்டுகிறார்.
உ.பி., அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் குறித்து மக்களவையில் இன்று நடந்த விவாதத்திற்கு பதிலளித்த உள் துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டேல் இவ்வாறு கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க உ.பி. அரசு தவறியிருந்தால் அதனை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை நிகாரித்த சிவ்ராஜ் பட்டேல், ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாற்றுவதால் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது என்றும், பயங்கரவாத்ததை ஒடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என்றும் கூறினார்.
பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அளவிலான குற்றப் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சிவ்ராஜ் பட்டேல், அதற்கு அனைத்து மாநில அரசுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டால் மட்டுமே சாத்தியமாகும் என்று பதிலளித்தார்.
நமது நாட்டின் உள்நாட்டு உளவு அமைப்பால் ஒவ்வொரு கிராமத்தையும் கண்காணிக்க முடியாது என்றும், அது அந்தந்த மாநில காவல் துறையின் ரகசிய உளவு அமைப்பு செய்ய வேண்டிய வேலை என்றும் சிவராஜ் பாட்டீல் கூறினார்.