குழந்தைகள் பாதுகாப்பிற்கு புதிய சட்டம் : மத்திய அரசு!
Webdunia
திங்கள், 26 நவம்பர் 2007 (18:30 IST)
நமது நாட்டில் அதிகரித்துவரும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக புதிய சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக இணையமைச்சர் ரேணுகா செளத்ரி, நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக உள்ளன. தேசிய குற்றப் பதிவேட்டுப்படி, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் மேலும் அதிகரிப்பதற்கான ஆதாரமில்லை என்று கூறினார்.
குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றுக்காக தனியாக திட்டம் எதுவும் இல்லை என்றாலும், குழந்தை தொழிலாளர்களின் மறுவாழ்வு, பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஒருங்கிணைந்த தெருவோரக் குழந்தைகள் நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கல்வியும் வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், 11 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தில் மத்திய அரசு உதவியுடன் செயல்படக் கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களில் குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் உருவாக்கப்படும்.
இந்த மையங்கள் மூலம் தத்தெடுப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். குழந்தைகளை அயல்நாடுகளுக்கு தத்துக்கொடுப்பதை இம்மையங்கள் கண்காணிக்கும் என்று கூறியுள்ளார்.
அங்கீகாரமில்லாத தத்தெடுப்பு முகவாண்மைகள், மருத்துமனைகள், விடுதிகள் மூலம் சட்டவிரோதமாகக் குழந்தைகள் தத்துக் கொடுப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் பெற்ற தத்துக் கொடுப்பு மையங்களுக்கு அதிக உதவிகள் வழங்கப்படும் என்ற அமைச்சர் ரேணுகா செளத்ரி கூறியுள்ளார்.