டெல்லியில் இன்று சர்வதேச சட்ட வல்லுநர்கள் மாநாடு: குடியரசுத் தலைவர் துவக்கி வைக்கிறார்!
Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (13:22 IST)
சட்டம் தொடர்பான இரண்டு நாள் சர்வதேச சட்ட வல்லுநர்கள் மாநாட்டை இன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் துவக்கி வைக்கிறார்.
இம்மாநாட்டை சர்வதேச சட்ட வல்லுநர்கள் அமைப்பு, அகில இந்திய பார் கவுன்சில், இந்திய சட்ட வல்லுநர்கள் குழு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இம்மாநாட்டிற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
இதில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், சட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பார் கவுன்சில் தலைவர்கள், தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள், கலைத்துறையைச் சார்ந்தவர்கள், அரசு அதிகாரிகள், வங்கி, நிதி அமைப்புகளின் பிரதிநிதிகள், பத்திரிக்கை, ஊடகவியலார்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி, ஆர்.சி.லகோதி, சர்வதேச பார் கவுன்சில் தலைவர் ஃபெர்ணான்டோ பாம்போ, அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் ஆதிஸ் சி.அகர்வால், வங்கதேசம் தலைமை நீதிபதி ரூஹீல் அமீன், இங்கிலாந்து பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் நவ்நீத் டோலக்கியா, ஆசிய சட்டக் குழுத் தலைவர் மேக் வெங்கிவாய், கியிஃபோர்டு சேன்ஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஷெரிஸ் பெரின் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த சர்வதேச சட்ட வல்லுநர்கள் குழு, சமூக, பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப மக்களுக்கு உகந்த சட்ட நிர்வாகத்தை கொணர்வது, சட்டத்தின் செயல்பாட்டை ஆரோக்கியமானதாக மாற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.