கொல்கத்தா கலவரம்: மாநிலங்களை நாள் முழுவதும் தள்ளிவைப்பு
புதன், 21 நவம்பர் 2007 (18:52 IST)
நந்திகிராம் வன்முறைகளைக் கண்டித்து கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெடித்த கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரின் விளக்கத்தைக் கேட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நடவடிக்கைகள் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் நடந்த வன்முறைகளைக் கண்டித்து அனைத்திந்திய சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் கொல்கத்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்தது. அதை அடக்கக் காவல்துறையினர் நடத்திய தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விவகாரம் மாநிலங்களவையில் புயலைக் கிளப்பியது. இன்று மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு 2 மணிக்கு அவை கூடியவுடன், எஸ்.எஸ்.அலுவாலியா உள்ளிட்ட பா.ஜ.க. உறுப்பினர்களும், தினேஷ் திவேதி உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும், கொல்கத்தா கலவரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அவைக்கு விளக்கமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
நந்திகிராம் விவகாரத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதால், உறுப்பினர்கள் அமைதிகாக்க வேண்டும் என்று அவையின் துணைத் தலைவர் ரஹ்மான் கான் கேட்டுக்கொண்டார்.
''நந்திகிராம் விவகாரத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அளித்துள்ள தாக்கீது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் நிலவும் சட்டம் ஒழுங்கு விவகாரம் மாநிலத்தின் பிரச்சனையாகும். இதில் எப்படி விளக்கமளிக்கும்படி உள்துறை அமைச்சருக்கு நான் உத்தரவிட முடியும்?'' என்று அவையின் துணைத் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். கலவரத்தை தொலைக்காட்சிகளில் பார்த்தபிறகும் நாடாளுமன்றம் அமைதியாக இருக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்திக் கூச்சலிட்டனர்.
இந்தக் கூச்சல் தொடர்ந்து 7 நிமிடங்களுக்கும் மேல் நீடித்தது. எனவே வேறு வழியின்றி அவையை 30 நிமிடங்களுக்கு அவைத் துணைத் தலைவர் தள்ளிவைத்தார்.
பின்னர் மதியம் 2.35 மணிக்கு மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும் பா.ஜ.க. உறுப்பினர்களும், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும் தங்களின் கருத்துகளை மீண்டும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
''கொல்கத்தாவில் நடந்துள்ள கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை பாதுகாப்பிற்கு அழைக்க மேற்குவங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உண்மை நிலவரம் குறித்து உள்துறை அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும்'' என்று அவர்கள் வலியுறுத்தினர்.
அவைத் துணைத் தலைவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமைதியடையவில்லை. எனவே இறுதியில் அவை நாள் முழுவதும் தள்ளிவைக்கப்பட்டது.