மியான்மர் ஆட்சியாளரை சந்திக்கிறார் மன்மோகன்!
செவ்வாய், 20 நவம்பர் 2007 (13:08 IST)
நாளை நடக்கவுள்ள கிழக்கு ஆசிய மாநாடு, ஆசியான் உச்சி மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
அவர் தனது பயணத்தின் போது சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய நாடுகளின் பிரதமர்களையும், மியான்மர் ராணுவ ஆட்சியாளர் தெய்ன் செய்னையும் சந்தித்துப் பேசுகிறார்.
தனது பயணத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், மியான்மர் ஆட்சியாளர் தெய்ன் செய்னைச் சந்திக்கும் போது அங்கு நிலவும் அரசியல் சூழ்நிலைகள் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
''ஆசியான் தலைவர்களைச் சந்திக்கும் போது பொருளாதார ஒத்துழைப்பு மட்டுமன்றி, தகவல் தொழில் நுட்பம், மனிதவள மேம்பாடு, போக்குவரத்து, உடல்நலம், அறிவியல் தொழில்நுட்பம், மக்கள் தொடர்பு ஆகியவை பற்றியும் விவாதிப்பேன்.
நமது 'கிழக்கு நோக்கிய பார்வை' என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய முடிவுகளை எடுப்பதற்கு இந்தச் சந்திப்பு உதவும்.
ஆசியான் நாடுகளுடன் நமக்குள்ள இருதரப்பு வணிக உறவுகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தற்போது 30 பில்லியன் டாலர் அளவிற்கு வணிகம் அதிகரித்துள்ளது'' என்றார் பிரதமர்.
இதேபோல, மூன்றாவது கிழக்கு ஆசிய மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர், சர்வதேச பிரச்சனைகளில் நமது எதிர்கால நிலைபாடுகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.