ஆளுநரின் உத்தரவுப்படி நேற்று எட்டியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கு கோருவதற்காக சட்டசபையின் கூட்டம் கூட்டப்பட்டது. சட்டசபையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால், தாங்கள் விதித்த 12 நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தேசிய தலைவர் தேவகவுடா உறுதியாக இருந்தார்.
ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேறிய பிறகு, இது பற்றி பேச முடியும் என்ற தங்களது முந்தைய நிலையில் பா.ஜ உறுதியாக இருந்தது.
இந்நிலையில் சட்டசபை கூடுவதற்கு முன்னரே மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் ஆதரவு நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக இருக்காது என்று தெளிவாக தெரிந்தது.
சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து கொண்டு இருக்கும் போதே, முதல்வர் எட்டியூரப்பா ராஜினாமா செய்வதாக சட்டசபையிலேயே அறிவித்தார்.
இதையடுத்து அவர் பதவி விலகல் கடிதத்தை நேற்று மாலை ஆளுநர் ராமேஷ்வர் தாகூரிடம் நேரடியாக ஒப்படைத்தார்.
இதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ராமேஷ்வர் தாகூர், கர்நாடக மாநிலத்தின் நிலவும் அரசியல் நிலைமை பற்றியும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கான தனது பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
இத்துடன் மாநிலத்தின் நிலவும் அரசியல் நிலைமை பற்றியும் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிவராஜ் படேல் ஆகியோருக்கும் அனுப்பினார்.
நேற்று கூடிய மத்திய அமைச்சரவையின் அரசியல் விவகார குழு கூட்டத்தில், ஆளுநரின் அறிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது.
பிரதமர் மன்மோகன்சிங் ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூருக்கு செல்வதால் இன்று அதிகாலை அவசரமாக பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.
இக்கூட்டத்தில், கர்நாடகத்தில் மீண்டும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கும், சட்டப் பேரவை நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பரிந்துரை குடியசுத் தலைவர் பிரதீபா பாடீலுக்கு அனுப்பப்படும்.
குடியரசுத் தலைவர், கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவகற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்.
கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டாலும், சட்டசபை கலைக்கப்பட வில்லை. சட்டசபை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையைக் கலைப்பதாக இருந்தால், சட்டசபையை கலைத்த இரண்டு மாதத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதலைப் பெற வேண்டும்.
கர்நாடகாவில் ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கர்நாடாக மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் நடத்துவதையே பெரும்பாலான அரசியல் கட்சிகள் விரும்புகின்றன. பாரதிய ஜனதா கட்சி தேர்தலை சந்திப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டது.
காங்கிரஸ் கட்சியும் தேர்தலை நடத்துவதையே விரும்புகிறது. இது பற்றி கர்நாடக மாநில விவகாரங்களுக்கு பொறுப்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சருமான பிரிவிதிராஜ் சவுகான் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தில் நிலையான அரசு அமையும் வாய்ப்பு இல்லை. நாங்கள் மீண்டும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேவகவுடாவுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. சட்டசபைக்கான தேர்தல் நடத்துவதே கர்நாடக மக்களுக்கு சிறந்தது என்றார்.