ராமர்கோவில் : உச்ச நீதிமன்றம் நிராகரித்தது!
திங்கள், 19 நவம்பர் 2007 (18:25 IST)
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் உடனடியாக ராமர் கோவிலைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உள்பட தொடர்புடைய அதிகார அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரித் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
முகேஷ் செளகான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், "அயோத்தியில் குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் கட்டுமானத்தில் வி.ஹெச்.பி., ஹிந்து மகாசபா போன்ற ஹிந்து அமைப்புகளின் பங்களிப்பு கட்டாயமாக இடம்பெற வேண்டும். அதற்கு மத்திய அரசு உள்ளிட்ட தொடர்புடைய அதிகார அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இவ்வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஜெ.எம்.பஞ்சால் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ''ராமர் கோவில் கட்டுவதால் ஏற்படும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா? ஒருவேளை மதக் கலவரம் வெடித்தால், அந்த மதக் கலவரத்திற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா?" என்று கடுமையாகக் கேள்வி எழுப்பினர்.
பின்னர், மனுதாரர் கோருவது போன்ற உத்தரவுகளை இந்த நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை நிராகரித்தனர்.