நந்திகிராம் வன்முறை: 3 மாநிலங்களில் முழு அடைப்பு!
Webdunia
திங்கள், 19 நவம்பர் 2007 (12:45 IST)
நந்திகிராமில் நடந்த வன்முறைகளைக் கண்டித்து மேற்குவங்காளம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் வன்முறை வெடித்தது. இதைக் கண்டித்து அம்மாநில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதன் ஒருபகுதியாக இந்திய கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் கட்சி சார்பில், மேற்குவங்காளம், ஜார்கண்ட், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் 48 மணிநேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் இன்று காலை முதலே மூன்று மாநிலங்களிலும் ரயில், சாலைப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன என்றும், கடைகளும், வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் பிம்கார்க் என்ற ஊரில் ரயில் தண்டவாளங்கள் 6 மீட்டர் நீளத்திற்கு பெயர்க்கப்பட்டன. இதனை ரயில்வே ஊழியர்கள் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.