சோனியா மீதான வழக்கு நிராகரிப்பு!
திங்கள், 12 நவம்பர் 2007 (18:40 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் முறைகேடு செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரவீந்திர குமார் தாக்கல் செய்த மனுவில், ''குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல்களில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்திய வேட்பாளர்களான பிரதீபா பாட்டீல், முகமது ஹமீது அன்சாரி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சோனியா காந்தி விருந்தளித்தார்'' என்று குற்றம்சாற்றி இருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், டி.கே.ஜெய்ன் ஆகியோர் முன்பு நடந்து வந்தது.
இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ரவீந்திர குமார் போதுமான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறி வழக்கை நிராகரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.