டெல்லியில் பேரழிவு காரணிகள் குறைப்பு : ஆசிய-பசிபிக் மாநாடு!
Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (18:04 IST)
இயற்கைப் பேரிடரால் ஏற்படும் அழிவுகளை குறைப்பது தொடர்பாக தில்லியில் நடைபெறும் இரண்டு நாள் இரண்டாவது ஆசிய நாடுகளின் அமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ஆசிய பசிபிக் மண்டலத்தைச் சேர்ந்த 52 நாடுகள் பங்கேற்கின்றன.
கடந்த 2005 ம் ஆண்டு ஜப்பானில் உள்ள ஹைகோவில் நடைபெற்ற சர்வதேச பேரழிவு ஆபத்துக் காரணிகளை குறைப்பது தொடர்பான மாநாட்டில் 2005-15 க்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயல் திட்டம் வரையறுக்கப்பட்டது. இதன்மூலம் அந்தந்த நாடுகளில் ஏற்படும் இயற்கை பேரிடர் அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.
கடந்த செப்டம்பர் மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற முதலாவது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது ஆசிய நாடுகளில் நடைமுறைப் படுத்தப் பட்டு வருகிறது.
ஹைகோ மாநாட்டின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பல்வேறு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள், ஆசியாவில் பேரழிவை உருவாக்கும் காரணிகளை குறைப்பது தொடர்பாக சீனா மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.
பேரழிவு நிகழ வாய்ப்பு உள்ள பல்வேறு துணை மண்டலங்களின் தகவல்களை ஒருங்கிணைப்பதன் முலம் அரசு பிற அமைப்புகளிடமிருந்து ஒத்துழைப்பை பெறுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
சர்வதேச அளவில் ஒரு அமைப்பை உருவாக்குவது, பேரழிவு உண்டாக்கும் காரணிகளை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச வழிமுறைகளைப் பயன்படுத்துவது, ஆசியாவில் பேரழிவை உண்டாக்கும் காரணிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான இலக்கையும் வழிமுறைகளையும் கண்டறிவது குறித்தும் முடிவு எடுக்க படுகிறது.
இம்மாநாட்டில் பேரழிவு உருவாக காரணமான காரணிகளை கட்டுப்படுத்தவது தொடர்பான கொள்கைகள், திட்டங்கள், பொது, தனியார் பங்களிப்பு, மறுவாழ்வு, மறுசீரமைப்பு, நடவடிக்கைகள், பிராந்திய ஒத்துழைப்பை அதிகரித்தல் ஆகிய நான்கு முக்கிய அம்சங்கள் தொடர்பாக நாடுகளுக்கிடையை கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
பேரழிவு காரணிகளை குறைப்பது தொடர்பாக விஞ்ஞான வழி முறைகளைப் பயன்படுத்துவது, தொழில்நுட்பம் ஆகியவற்றை வளர்ச்சி திட்டங்களைச் செயல்படுத்தும் போது கருத்தில் கொள்வது தொடர்பாக இரண்டு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறுகிறது.
இது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் பல்வேறு தேசீய, பன்னாட்டு நிறுவனங்கஙள் இடம் பெற்றுள்ளன. இம்மாநாட்டின் இறுதியில் பேரழிவு காரணிகளைக் குறைப்பது தொடர்பான தில்லி பிரகடணம் வெளியிடப்படுகிறது.