இந்தியாவைப் போன்ற பல்வேறு மாநிலங்களைக் கொண்ட ஒரு தேசத்தின் முக்கியமான இலக்குகளை நிறைவேற்ற அவசியமான ஒற்றுமையை உருவாக்க இயலுமா என்பதில் தனக்கு சந்தேகம் உள்ளதென பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
கூட்டாட்சி குறித்த 4வது சர்வதேச மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றிய பிரதமர், “நாட்டை எதிர்நோக்கியுள்ள, தீர்வு காணவேண்டிய பிரச்சனைகளெல்லாம் கூட, மாநில பற்றுதல்கள், கொள்கை விசுவாசங்கள் அடிப்படையிலான அரசியல் வண்ணங்கள், குறுகிய அரசியல் பார்வைகள் ஆகியவற்றால் தேச நோக்கும், மக்களின் ஒட்டுமொத்த நலனும் சிதைக்கப்படுகின்றன“ என்று கூறினார். இந்தியாவின் கூட்டாட்சி அரசியலுக்கு அடிப்படையான மத்திய - மாநில உறவுகளுக்கு கட்சி ரீதியான அணுகுமுறை ஒரு பெரும் சவாலாக உள்ளதெனக் கூறிய மன்மோகன் சிங், நமது நாட்டிற்கு பல கட்சிகள் பங்கேற்கும் கூட்டணி அரசைவிட, மத்திய - மாநில உறவுகளை நன்கு பேணிக்காக்க ஒரு கட்சி ஆட்சி சிறந்ததா என்பதை இம்மாநாடு ஆராய வேண்டும் என்று கூறினார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கூட பெரும் பதற்றம் ஏற்படுகிறது என்று கூறிய பிரதமர், அண்டை நாடுகளுடனான நதிநீர் தகராறுகளைக் கூட சுலபமாகத் தீர்க்க முடிகிறது, ஆனால் இரு மாநிலங்களுக்கு இடையிலான தகராறுகளைத் தீர்ப்பது கடினமாக உள்ளதெனக் கூறினார்.