அணுசக்தி ஒப்பந்தம் விவகாரத்தில் எங்களுக்குள் குழப்பமில்லை: யஷ்வந்த் சின்ஹா!
Webdunia
திங்கள், 5 நவம்பர் 2007 (19:17 IST)
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நாங்கள் குழப்பமடையவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
பா.ஜ.க.வின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அயலுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹாவை இன்று அமெரிக்கத் தூதர் டேவிட் முல்போர்ட் சந்தித்து, அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்கள் நாட்டின் நிலையை விளக்கினார்.
புதுடெல்லியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்குமாறு சின்ஹாவிடம் முல்போர்டு கேட்டுக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்போர்ட் தெரிவித்த எல்லாக் கருத்துகளுக்கும் சாதகமான பதிலையே சின்ஹா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கருத்துகளைக் கேட்டறிவதற்காகவே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. மற்றபடி எங்களுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. ஊடகங்கள்தான் எங்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது.
இருதரப்பு நிலைகளையும் கவனித்த பின்பே இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மீண்டும் பேச்சு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த பா.ஜ.க முடிவு செய்துள்ளது.
தற்போதுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். அமெரிக்காவுடனான நட்புறவு நாட்டிற்கு அவசியம் என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பா.ஜ.க இடையூறு செய்யாமல் அனுமதிக்குமா என்று கேட்டதற்கு, அதுபற்றி நாடாளுமன்றக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக எதிர்க் கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா ஆகியோரையும் டேவிட் முல்போர்ட் சந்தித்தார்.